மாநிலங்களவையில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் மத்திய அமைச்சர், பாஜக எம்பியை அவையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கடிந்து கொண்டார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கலாச்சார விழாவுக்காக டெல்லி யமுனை நதியில் தற்காலிக பாலங்களை ராணுவ வீர்ர்கள் அமைத்து வருவது குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று பிரச்சினை எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இந்த பதிலால் திருப்தி அடையாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இவர்களில் சிலர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர்.
அவையை நடத்திய துணைத் தலைவர் பி.ஜே.குரியன், இது குறித்து அரசு பதில் அளித்துவிட்ட தால் உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்று அமர்ந்து, பூஜ்ஜிய நேரம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் குரியன் எழுந்துநின்றபடி, அவையை ஒழுங்குபடுத்த முயற் சித்தார். அப்போது, எதிர்க்கட்சி யினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிக் கொண்டே இருந்த பாஜக மூத்த எம்பி விபி சிங் பட்னோரை இருக்கை யில் அமருமாறு குரியன் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இதைப் பொருட் படுத்தாமல் பட்னோர் பேசிக் கொண்டே இருந்ததால் கோப மடைந்த குரியன், “நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள்தான் அவையின் துணைத்தலைவரா” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார்.
பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் களைப் பார்த்து, அவையில் தேவையில்லாமல் கோஷம் எழுப்புகிறீர்கள் என்று குரியன் சொன்னார். அப்போது, இருக்கை யில் அமர்ந்திருந்த மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஏதோ ஒரு கருத்தை தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குரியன் கூறும்போது, “அமைச்சர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார். ஒரு கட்டத்தில் அதிமுக எம்.பி.க்களும் அவையின் மையத்துக்கு வந்தனர். ஆனால், அமளி காரணமாக அவர்கள் எதற்காக கூடினர் என்பது தெரியவில்லை.