இந்தியா

100 கோடி தடுப்பூசிக்கு பிறகு சுணக்கம் காட்டினால்  புதிய பிரச்னையை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

100 கோடி தடுப்பூசி போட்ட பின்னர், சுணக்கம் காட்டினால், அது புதிய பிரச்னையை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

ஜி-20 உச்சிமாநாடு, சிஒபி-26 ஆகியவற்றில் பங்கேற்று நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது ஏற்பட்ட பெருந்தொற்றினால், நாடு ஏராளமான சவால்களை சந்தித்தது. கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், நாம் புதிய தீர்வுகளையும், கண்டுபிடிப்பு முறைகளையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

சுகாதார பணியாளர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்கள், பல மைல் தூரம் நடந்து சென்று, நெடுந்தொலைவுகளில் உள்ள கிராமங்களுக்கும் தடுப்பூசியை கொண்டு சென்றனர். உங்களின் கடும் உழைப்பினால், தடுப்பூசி போடும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நீங்களும், உங்களது பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியில் புதிய வழிகளை ஆராய வேண்டும். இனிமேல், வீடுகளை தேடி சென்று தடுப்பூசியை போடும் நேரம் வந்துவிட்டது.

முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் போட்ட மாநிலங்களில் புதிய பிரச்னை எழுந்துள்ளதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். புவியியல் சூழ்நிலைகள், இயற்கைவளங்கள் காரணமாக சவால்கள் எழுந்தாலும், மாவட்டங்கள் அதனை தாண்டி முன்னேறி செல்வது அவசியம்.

100 கோடி தடுப்பூசி போட்ட பின்னர், சுணக்கம் காட்டினால், அது புதிய பிரச்னையை ஏற்படுத்தும். நமது எதிரியையும், நோயையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதனை ஒழிக்கும் வரை கடுமையாக போராட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT