பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கல்விச் சேவை வருமா? விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

கல்வி என்பது சேவை வரம்புக்குள் வந்தால், அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்குள் வருமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கோடு சேர்த்து இதுவும் விசாரிக்கப்பட உள்ளது.

லக்னோவைச் சேர்ந்த மனுதாரர் இந்த மனுவை, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளார். நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் கல்வி நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது, மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் நீச்சல், உள்ளிட்ட பிற விளையாட்டுகள் சேவையில் வராது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வராது எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து லக்னோவைச் சேர்ந்தவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரரின் மகன் கடந்த 2007-ம் ஆண்டு லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். அப்போது, மாணவர்களுக்கு நீச்சல், கராத்தே, உள்ளிட்ட பல்வேறு இதர வகுப்புகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

திடீரென ஒருநாள் அதாவது 2007, மே 28-ம் தேதி மனுதாரருக்குத் தகவல் அளித்த பள்ளி நிர்வாகம் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என வரவழைத்தது. அவரிடம் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மூழ்கி மகன் இறந்துவிட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து, மனுதாரர் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், சேவைக் குறைபாடுடன் இருந்த பள்ளி நிர்வாகம் தனது மகனின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ.20 லட்சமும், மன உளைச்சலுக்கு ரூ.2 லட்சமும், வழக்குச் செலவுக்கு ரூ.55 ஆயிரமும் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆனால், இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது எனக் கூறி மாநில நுகர்வோர் ஆணையம் மனுவைத் தள்ளுபடி செய்தது. நீச்சல் என்பது சேவையின் கீழ், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது எனத் தெரிவித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயமும் இதே தீர்ப்பை வழங்கவே, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT