நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் டெங்கு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழுக்கள் ஆய்வு நடத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (நவ.2), டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லி மற்றும் பாதிப்பு உள்ள மாநிலங்களில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
குப்பைகள் தண்ணீர் சேராதவாறு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன. டெங்குவை கட்டுப்படுத்த பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு உதவிகள் அளிக்கும். டெங்கு அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணாவுக்கு சிறப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்மாறு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான டெங்கு காய்ச்சல் எண்ணிக்கையில் 86% சதவீதம் மேற்கூறிய 9 மாநிலங்கள் உள்ளிட்ட 15 மாநிலங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.