பயிர்க் காப்பீடு செய்யும் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரியமுறையில் இழப்பீடு வழங்காமல்ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றன என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, மகசூல் இழப்பு ஏற்பட்டு, நஷ்டமடைவதைத் தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களில் பயிர்க் காப்பீடு செய்யப்படுகிறது. சாகுபடி பரப்பளவு மற்றும் பயிர் வகையைப் பொறுத்து காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, அதில் விவசாயிகள் 50 சதவீதமும், மத்திய,மாநில அரசுகள் 50 சதவீதமும் செலுத்தி காப்பீடு செய்கின்றன.
பயிரை காப்பீடு செய்த போதிலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழு அளவில் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2020-21 சம்பா பருவத்தில் 36மாவட்டங்களில் 11,742 கிராமங்களைச் சேர்ந்த 13.01 லட்சம் விவசாயிகளிடமிருந்து (மத்திய, மாநில அரசுகள் அளித்த பங்கும் சேர்த்து) காப்பீட்டு நிறுவனங்கள் பெற்ற மொத்த பிரீமியத் தொகை ரூ.3,176.53 கோடியாகும். இதில் பயிர்க் காப்பீடு நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள இழப்பீடுத் தொகை ஏறத்தாழ 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597.18 கோடி மட்டுமே. இதன் மூலம் பயிர்க் காப்பீடு நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,579 கோடி லாபம் ஈட்டியுள்ளன.
பெரும்பாலான கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இழப்பீடு கிடைக்காத கிராமங்களை வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிறைய குறைபாடுகளும், குளறுபடிகளும் உள்ளன.கடந்த 5 ஆண்டுகள் புள்ளிவிவரப்படி தேசிய அளவில் காப்பீடு செய்த விவசாயிகளில் 28 சதவீத விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற்றுள்ளனர். மீதமுள்ள 72 சதவீத விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த 5 ஆண்டுகளில் பயிர்க் காப்பீடு நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.33 ஆயிரம் கோடி நியாயமின்றி சம்பாதித்துள்ளன.
எனவே, பயிர்க் காப்பீடு மற்றும்இழப்பீடு வழங்கும் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
நிகழ் சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 20 சதவீத இழப்பீடு பெற ஊக்கத் தொகையுடன் இணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மாநில திட்டக்குழுவிடம் விவசாயிகள் ஆலோசனைகளை தெரிவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இழப்பீடே பெறாத கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஊக்கத் தொகை அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.