போதிய பணியாளர்கள் இல்லாததால் நாடு முழுதும் சிறைகளில் வன்முறைகளும், இயற்கைக்கு மாறான மரணங்களும் நிகழ்கிறது என்பதை ஒருபோதும் ஏற்கக் கூடியதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மாநில அரசுகளும் சிறைத்துறை அதிகாரிகளும் போதிய சிறைப் பணியாளர்கள் இல்லாததால் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் லோகுர் மற்றும் என்.வி. ரமணா அடங்கிய அமர்வு, “ஊழியர்கள் குறைவு என்பதைக் காரணம் காட்டி சிறையில் நிகழும் மரணங்களை மாநிலங்கள் அனுமதிப்பது கூடாது “ என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.
“எத்தனை ஊழியர்கள் அவர்களுக்கு வேண்டும். 1.5 பில்லியன் மக்கள் வாழும் நாடு இது. ஆனால் ஊழியர்களை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. அவர்களுக்கு என்னதான் வேண்டும்? நாடு முழுதும் சிறைகளில் வேலை செய்ய வேண்டுமா?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினர்.
மேலும், மாநில போலீஸ் துறை டிஜிபி-க்களுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து ஊழியர்கள் பற்றாக்குறை குறித்த விவரங்களை அளிக்குமாறு உத்தரவிட்டது.
நீதிமன்றத்திற்கு நடுநிலை அறிவுரையாளராக விளங்கும் கவுரவ் அகர்வால் என்பவர், சிறைகளில் நாடு முழுதும் தற்கொலைகள் நடைபெறுகிறது என்றும் கைதிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் போது வன்முறையில் கைதிகள் மர்மமான முறையில் இறப்பதும், கோஷ்டி மோதல், கைதிகள் எழுச்சி ஆகியவை நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
மேலும் இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையே காரணம் என்று மாநில அரசுகளும் சிறை அதிகாரிகளும் தெரிவித்ததாக அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், மத்திய அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞரோ, இதில் ஓரளவுக்கு மேல் மாநிலங்களிடத்தில் தலையீடு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
“நாங்கள் இது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் மத்திய அரசு இதில் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.
இதனையடுத்து, மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் டிஜிபிக்கள், சிறை அதிகாரிகள் ஆகியோருடன் கூட்டம் ஒன்றை நடத்தி கலந்தாலோசித்து நீதிமன்ற வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சிறைக்கைதிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகி வருவது குறித்து கவலைகளையும் வெளியிட்டு இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பிறகும் நாடு முழுதும் உள்ள சிறைகளில் நிலைமை மோசமாக இருப்பதாகவே உச்ச நீதிமன்றம் சாடியது.
கடந்த ஜூன் 13, 2013-ல் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி, நாட்டில் சுமார் 1382 சிறைகளில் மனிதத்தன்மையற்ற செயல்கள் நடப்பதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். உடனடியாக பொதுநல வழக்கு தொடரப்பட்டு அரசுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது.
விசாரணைக் கைதிகள் சீராய்வு குழுவின் செயல் குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, விசாரணைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தரவிட்டது.
அதேபோல் மேலாண்மை தகவல் அமைப்பு ஒன்றை அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிறைகளில் உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.