வரும் 17-ம் தேதிக்குள் இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என ஜாட் இனத்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய ஜாட் மகாசபை தலைவர் யஷ்பால் மாலிக் இதுதொடர்பாக கூறும்போது, “வரும் 17-ம் தேதி எந்தவகையாக போராட்டம் நடத்துவது என்பதை முடிவு செய்வோம்” எனத் தெரிவித்தார். அகில பாரதிய ஜாட் மகாசபை தலைவர் ஹாவா சிங் சங்வான் “மாநில அரசுக்கு 17-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. இதுவரை எங்களின் கோரிக்கைக்கு எதுவும் பதிலளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் கடந்த மாதம் ஜாட் இனத்தவர்கள் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வன்முறை வெடித்ததில் 30 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.