விராட் கோலியின் 9 மாதங்களே நிரம்பிய சின்னஞ்சிறிய மகளுக்கு அநாகரிகமான ஏற்றுக் கொள்ளவே முடியாத பாலியல் துன்புறுத்தல் மிரட்டல் விடுத்தவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் 20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது மதத்தைக் குறிப்பிட்டு அவரையும் அவரது குடும்பத்தாரையும் தரக்குறைவாக விமர்சித்தனர். அப்போது அணியின் தலைவர் என்ற முறையில் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாகப் பேசினார்.
இந்நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் தருவோம் என மிரட்டல் விடுத்து சில ஆபாசப் பதிவுகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புள்ள விராட், இவர்கள் வெறுப்பால் ஆனவர்கள். அவர்களிடம் யாரும் அன்பு செலுத்தியிருக்கமாட்டார்கள். அவர்களை நீங்கள் மன்னித்துவிடுங்கள். அணியைப் பாதுக்காத்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
நடவடிக்கை கோரும் டெல்லி மகளிர் ஆணையம்:
இதற்கிடையில் இந்த சர்சையை தாமாகவே முன் வந்து கையில் எடுத்துள்ள டெல்லி மகளிர் ஆணயம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், விராட் கோலியின் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் இவ்விவகாரத்தை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததில் இருந்தே இந்திய அணி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அதுவும் குறிப்பாக சக வீரர் முகமது ஷமிக்கு எதிரான மத துவேஷங்களைத் தட்டிக் கேட்டதில் இருந்தே கோலி மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இப்போது அவருடைய 9 மாத பெண் குழந்தைக்கு மிக மோசமாக மிரட்டல் வந்திருக்கிறது.
இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் நகல், இதில் யாரேனும் கைது செய்யப்பட்டால் அதன் விவரம், ஒருவேளை யாரும் கைது செய்யப்படவில்லை என்றால் இதில் போலீஸர் எடுத்த நடவடிக்கை என்ன உள்ளிட்ட தகவல்களை அளிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது.