தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
தெலங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் நீண்ட ஆண்டுகளாக முதல்வர் சந்திரசேகர ராவுடன் பங்கேற்று வந்தவர் ஈடல ராஜேந்தர். பின்னர் தெலங்கானா மாநிலம் உருவானதும், டிஆர்எஸ் கட்சியில் இவரின் பங்கு முக்கிய மாக கருதப்பட்டது.
தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில், முதலில் நிதி அமைச்சராகவும், இரண்டாவது முறையாக சுகாதார துறை அமைச்சராகவும் ராஜேந்தர் பதவி வகித்தார்.
இவர் மீது நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட்டார். அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதனால், முதல்வருக்கும், ஈடல ராஜேந்தருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். மேலும் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
இவர் ராஜினாமா செய்த ஹுஜாராபாத் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அவர் இந்த முறை பாஜக வேட்பாளராக களமிறங்கினார்.
முதல்வர் சந்திரசேகர் ராவின் மருமகனும், தெலுங்கானா நிதி அமைச்சருமான ஹரிஷ் ராவ் ஆளுங்கட்சிக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், மேலும் கேசிஆர் அல்லது அவரது மகன் கேடி ராமராவ் அங்கு பிரச்சாரம் செய்யவில்லை.
டுபாக் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்ட பிறகு, ஹுசூராபாத்தில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு பாஜக செயல்பட்டது.
வாக்கு எண்ணிக்கையில் முதலில் இருந்தே முன்னிலை பெற்று வரும் ஈடலா ராஜேந்தர் மாலை நிலவரப்படி 68486 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் டிஆர்எஸ் வேட்பாளர் கெல்லு ஸ்ரீனிவாஸ் யாதவ் 57003 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதேசமயம் காங்கிரஸின் பல்மூர் வெங்கட் நர்சிங் ராவ் 2,000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். விரைவில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் எனத் தெரிகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் தொகையை பெறுவது கடினம் என்ற சூழல் நிலவுகிறது.
இதன் மூலம் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ்-க்கு சவாலாக வெளிப்படுவதால், இங்கு வெற்றி பெறுவது பாஜகவுக்கு புதிய வேகத்தை அளிக்கும் என கருதப்படுகிறது.