மத்தியில் ஆளும் பாஜக தலைவர்களின் வருமானம்தான் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயரவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில் கபில் சிபல் இதைத் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் சிசோடியா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், “விலை உயர்வைப் பற்றி மக்கள் புகார் கூறக் கூடாது. அனைத்து சமூகத்து மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயராமல் இருக்கிறதா? அனைத்தையும் இலவசமாக அரசால் வழங்க முடியாது.
வருமானம் உயரும்போது, மக்கள் விலைவாசி உயர்வையும் புரிந்துகொண்டு ஏற்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றார், அவர் தற்போது ரூ.50 ஆயிரம் பெறுகிறார். அப்படியிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் பழைய விலையில் விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அது சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார்.
மகேந்திர சிங் சிசோடியா கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பாஜக தலைவர்கள், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நிதர்சன உலகில் இல்லை. அதனால்தான் இதுபோன்ற கருத்துகளைக் கூறுகிறார்கள். மகேந்திர சிங் சிசோடியா கூறுகிறார், ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றவர். தற்போது ரூ.25 ஆயிரம் பெறுகிறார் என்றார். இது கொடூரமான நகைச்சுவை. பாஜக தலைவர்கள், அமைச்சர்களின் வருமானம் மட்டும்தான் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயரவில்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் வீழ்ச்சி விரைவில் நடக்கும். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும்போது மத்தியில் ஆளும் பாஜக அரசின் வீழ்ச்சி தொடங்கும்.
பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு ஏழைகளைப் பற்றிச் சிந்திக்காமல் மத அரசியலைப் பற்றி மட்டுமே யோசிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தோல்வி, மத்தியில் அந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்''.
இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.