என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் | கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைது: 12 மணிநேர விசாரணைக்குப்பின் அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

ஏஎன்ஐ

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், என்சிபி கட்சியின் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் 12 மணிநேர விசாரணைக்குப்பின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அனில் தேஷ்முக்கை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பின் அமலாக்கப்பிரிவினர் விசாரணைக்காக காவலில் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் சேர்ந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். முதல்வர் உத்தவ் தாக்கரே அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். என்சிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான தேஷ்முக் மீது மும்பை போலீஸ் ஆணையர் பரம் பிர் சிங் குற்றம்சாட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து மும்பை போலீஸ் ஆணையர் பதிவியிலிருந்து பரம்பிர் சிங் நீக்கப்பட்டது. அதன்பின் பரம் பிர் சிங் அளித்த பேட்டியில் “ தன்னை மாதந்தோறும் மும்பையில் உள்ள மதுபார்கள், ஹோட்டல்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்துதரக் கோரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்துகிறார்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார். அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சிபிஐ தேஷ்முக், அவரின் மனைவி, மகன் ரிஷிகேஷ் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ வழக்குப்பதிவு செய்ததை ஆதாரமாக வைத்து அமலாக்ப்பிரிவு மும்பை, நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் ரெய்டு நடத்தியது.

இந்த ரெய்டைத் தொடர்ந்து அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமாக ரூ.4.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்தது. மேலும் அனில் தேஷ்முக் பதவியில் இருந்தபோது, ரூ.4.18 கோடி பணத்தை போலியான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அனில் தேஷ்முக் உதவியாளர்கள் இருவரையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பலமுறை அனில் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அமலாக்கப்பிரிவு சம்மனை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அனில் ேதஷ்முக் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அனில் தேஷ்முக் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதற்கான எந்தவிதமான வலுவான ஆதாரங்களையும் தெரிவிக்காததால், அமலாக்கப்பிரிவு சம்மனை ரத்து செய்ய முடியாது, விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் மேல் முறையீடு செய்துள்ளார்.

இதையடுத்து, நேற்று அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு அனில் தேஷ்முக் ஆஜராகினார். காலை 11.30 மணிக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு தனது வழக்கறிஞர், ஆதரவாளர்களுடன் சென்ற அனில் தேஷ்முக்கிடம் 12 மணிநேரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் நள்ளிரவில் அனில் தேஷ்முக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT