கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு மேலும் 5 நாடுகள் அங்கீகாரம்: கோவாக்சின், கோவிஷீல்டுக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி

செய்திப்பிரிவு

இந்திய அரசு கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை மேலும் 5 நாடுகள் அங்கீகரித்துள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தவிர ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது. இந்தச் சான்றிதழைப் பல நாடுகள் ஏற்றுக்கொண்டாலும் சில நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இது தொடர்பாக அந்தந்த நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி ஜி20 உச்ச மாநாடு, பருவநிலை மாநாட்டில் பங்கேற்க இத்தாலி, ஸ்காட்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் விளைவாக, இந்தியா வழங்கும் தடுப்பூசி சான்றிதழை மேலும் 5 நாடுகள் அங்கீகரித்துள்ளன.

எஸ்டோனியா, கிரிக்ஸ்தான், பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹங்கேரி, செர்பியா நாடுகள் இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்பதாகத் தெரிவித்தன. தொடக்கத்தில் இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்க பிரிட்டன் அரசு மறுத்தது.

இந்தியாவிலிருந்து வருவோர் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. ஆனால், அதற்கு இந்திய அரசு பதிலடி கொடுத்து பிரிட்டனில் இருந்து வருவோரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என விதிமுறையைச் சேர்த்தபின் இந்திய தடுப்பூசி சான்றிதழுக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை ஆஸ்திரேலிய அரசும் அங்கீகரித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை 2 டோஸ் செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்க அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதியளித்த மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் முதலாவதாக ஆஸ்திரேலியா அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT