இந்தியா

சிஏஏ, என்ஆர்சி அமலுக்கு வந்தால் நாட்டின் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள்: மத்திய அரசிற்கு ஒவைசி எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

தேசியக் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தினால் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள் என அசாதுதீன் ஒவைசி எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதை அவர் தெரிவித்தார்.

உ.பி.,யின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரம் தொடங்கி விட்டது. அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நகரங்களில் ஒன்றான சஹரான்பூரில் உவைஸி இன்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். இதில், அவர் சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை குறிப்பிட்டு மத்திய அரசை எச்சரித்தார்.

இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான ஒவைசி பேசுகையில், "மத்திய அரசின் புதிய சட்டங்களான என்ஆர்சியும், சிஏஏவையும் அமல்படுத்த முயன்றால் தெருக்களில் இறங்கி முஸ்லிம்கள் போராடுவார்கள்.

கோரக்பூரில் குப்தா என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அந்த குப்தாவின் குடும்பத்தினருக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ரூ.21 லட்சம் அளித்து உதவினார். இதே காரணத்திற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத், ரூ.50 லட்சம் அளித்ததுடன் குப்தாவை கொன்ற போலீஸாரை பணிநீக்கம் செய்துள்ளார்.

உ.பி.யின் பெரும்பாலான என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள். கிரிக்கெட் பேட்டியில் இந்தியாவின் தோல்விக்கு அதன் வீரர்களில் ஒருவரான ஷமி குறிவைக்கப்படுகிறார்.’ எனத் தெரிவித்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் நிறைந்த சஹரான்பூரில் பேசிய ஒவைசி, உ.பி.,யின் இதரக் கட்சித் தலைவர்களையும் விமர்சித்தார்.

இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை.

இது குறித்து ஹைதராபாத் எம்.பி ஓவைஸி கூறும்போது, "சஹரான்பூர் முஸ்லிம் உலமாக்களின் நிலமாகும். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக முஸ்லிம்களும் தம் ரத்தம் சிந்தியுள்ளனர்.

இதன் பிறகும் முஸ்லிம்கள் என்பவர்கள் வெறும் வாக்குவங்கிகள் என காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகள் கருதுகின்றன. வாக்குகளை பெற்றுக் கொண்ட பிறகும் முஸ்லிம்களுக்காக கல்வி நிலையங்களும், அவர்கள் பெண் பிள்ளைகளுக்கானக் கல்வியும் அளிக்கப்படவில்லை.

சமீபத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ் சஹரான்பூரில் பொதுக்கூட்டம் நடத்தினார். அவரது கட்சியின் மேடையில் ஒரு முஸ்லிம் தலைவர் கூட இடம்பெறவில்லை.

சமாஜ்வாதி ஆட்சியில் முசாபர்நகர் மதக்கலவரம் நடந்த போது அதன் முதல்வர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான சிபய் கிராமத்தின் கொண்டாட்டத்தில் இருந்தார். கலவரத்தில், முஸ்லிம்களில் பலரும் கொல்லப்பட்டதுடன் அவர்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வீடுகளை இழந்தனர்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT