கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கர்நாடக அரசின் முழு மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் (46) கடந்த 29-ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பினால் காலமானார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறப்பினை தாங்க முடியாமல் பெலகாவியில் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.
பெங்களூரு கண்டீரவா ஸ்டேடி யத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, எடியூரப்பா, சித்த ராமையா மற்றும் நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர், பிரபுதேவா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சகோதரரை இழந்த நடிகர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அமெரிக்காவில் வந்த மூத்த மகள் திரிதியை தாய் அஷ்வினியும், சகோதரி வந்திதாவும் கண்ணீரோடு தேற்றினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை புனித் ராஜ்குமாரின் உடலுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் கொட்டும் மழை, கடும் பனி, குளிர், வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் 'அப்பு.. அப்பு' என முழக்கமிட்டவாறு அஞ்சலி செலுத்தினர்.
தாய்-தந்தைக்கு நடுவில்....
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் நேற்று காலை 6 மணிக்கு கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது. சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோ வரையில் சாலையின் இருபுறங்களிலும் ரசிகர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரின் உடல் காலை 8 மணியளவில் கண்டீரவா ஸ்டுடியோவை அடைந்ததும் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் வினய் இறுதி சடங்குகளை மேற்கொண்டார். அவருக்கு முழு அரசு மரியாதையை செலுத்தும் விதமாக 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டன. இதையடுத்து புனித் ராஜ்குமாரின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி எடுக்கப்பட்டு, அவரது மனைவி அஷ்வினியிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.
தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மாவின் கல்லறைகளுக்கு நடுவே புனித் ராஜ்குமார் அடக்கம் செய்யப்படுவதற்கு முன் கடைசியாக அவரது முகத்தைப் பார்த்த சிவராஜ்குமார், மனைவி அஷ்வினி, மகள்கள் திரிதி, வந்திதா சத்தமாக கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
புனித் ராஜ்குமார் இறந்ததில் இருந்து இறுதிவரை உடன் இருந்த முதல்வர் பசவராஜ் பொம்மை புதைப்பதற்கு முன் அவரது நெற்றியில் முத்தமிட்டு பிரியா விடை கொடுத்தார்.
இதையடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தற்கொலை கூடாது
பின்னர் சிவராஜ்குமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘அப்பு (புனித்) என்னைவிட 13 வயது இளையவன். அவனை என் தம்பி என்பதை விட மகன் என்றே சொல்ல வேண்டும். அவன் இல்லாத சோகத்தை வார்த்தை களால் விவரிக்க முடியாது. அவன் ஊருக்கு சென்றிருக்கிறான் என்றே நினைக்க தோன்றுகிறது.
அப்புவின் இறுதிச் சடங்கை அமைதியுடன் நடத்திக்கொடுத்த முதல்வர் பசவராஜ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீஸாருக்கும் எங்கள் குடும் பத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன். அப்புவின் இறப்பை தாங்க முடியாமல் யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது. ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக உயிர் வாழ வேண்டும். அதுவே அப்புவின் விருப்பம்'' என்றார்.