பாஜக ஆளும் உ.பி.யில் சமீப காலமாக உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரம் பெறுவதற் காக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. உரம் கிடைக்காததால் லலித்பூரில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதிலும் உர விநியோகம் மீது தீவிர கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில், புகாரின் அடிப் படையில் நேற்று ஆக்ராவின் ரஹன்காலா பகுதியில் போலீஸார் உதவியுடன் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி னர். இதில், போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த இயந்திரங் கள், 30 குவிண்டால் போலி உரம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.போலி உரத்தை ரூ.50 செலவில் தயாரித்து ரூ.1,000-க்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் ஆக்ரா விவசாயத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த உரத்தில் டிட்டர்ஜென்ட், ஜிப்சம் மற்றும் சோடா கலக்கப் பட்டிருந்தது. இவற்றை உ.பி.யிலும் மற்ற காலங்களில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளனர்" என்றனர்.
இதுதொடர்பாக ஆக்ராவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிரஷாந்த் குமார், பல்கேஷ்வர், பகவன் குப்தா, ராம் நாராயண், லீலாதர் ஆகிய 5 பேர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இவ்வழக்குகள், 1985-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற புகார்களுக்காக உ.பி. அரசு சார்பில் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களும் வெளி யிடப்பட்டுள்ளன.