காங்கிரஸுடன் பின்வாசல் வழியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை, காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தருணம் முடிந்து விட்டது என கேப்டன் அமரீந்தர் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை காங்கிரஸ் மேலிடம் நியமித்தது.
அதைத் தொடர்ந்து சில நாட்களில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகினார்.காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கிய அமரீந்தர் சிங் கடந்த மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று சந்தித்தார்.
இதுஅரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. ஆனால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனவும் அமீரிந்தர் சிங் அறிவித்தார்.
இதனிடையே அவர் காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
காங்கிரஸுடன் பின்வாசல் வழியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை. காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தருணம் முடிந்து விட்டது. சோனியா காந்தி இதுவரை அளித்த ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் நான் காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க மாட்டேன். இதனை நான் ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டேன். விரைவில் சொந்தக் கட்சியைத் தொடங்குவேன், விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்தவுடன் பஞ்சாப் தேர்தலில் பாஜக, பிரிந்து சென்ற அகாலி பிரிவுகள் மற்றும் பிறருடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். பஞ்சாப் மற்றும் அதன் விவசாயிகளின் நலனுக்காக வலுவான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.