ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியையொட்டி மாதத்தில் 5 நாட்கள் இரவில் தாஜ்மகாலைக் காண மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரதேசத்தில் கரோனா பரவலால் நிலவிய ஊரடங்கு தளர்ந்ததன் எதிரொலியாக அமைந்துள்ளது.
கரோனா பரவலால் போடப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக ஆக்ராவின் தாஜ்மகாலை இரவில் பார்வையிட தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது உ.பி.யில் இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனால், சுமார் இரண்டு வருடங்களுக்கு பின் தாஜ்மகாலை இரவில் காண மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி, மாதத்தில் ஐந்து நாட்கள் பவுர்ணமி சமயத்தில் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நாட்களில் இரவு 8.30 மணி முதல் 12.30 வரை என ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என நான்கு பகுதிகளாகப் பிரித்து அனுமதிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதிக்கு ஐம்பது பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதிலும் சற்று தளர்வு செய்து ஒரே சமயத்தில் 400 பேர் தாஜ்மகாலை காணவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த நான்கு பகுதிகளுக்கு தலா ஐம்பது பேர் என்பதும் அகற்றப்பட்டுள்ளது.
ஒருமுறை உள்ளே செல்பவர்கள் இறுதி நேர அனுமதி வரை இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான அனுமதி சீட்டுகள் பகல்நேரங்களுக்கானதை போல் இணையதளத்தில் கிடைக்காது.
இரவுநேரப் பார்வைக்கான அனுமதி சீட்டுக்களை ஒருநாள் முன்னதாக ஆக்ராவின் மால் சாலையிலுள்ள இந்திய தொல்பொருள் ஆய்வகம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மகாலுக்கு வார விடுமுறை என்பதால் அன்றைய தினம் பார்வையாளர்கள் அனுமதி இல்லை. பவுர்ணமியின் ஐந்து நாட்களில் ஒன்று வெள்ளிக்கிழமையாக இருப்பின் நான்கு தினங்களுக்கு மட்டுமே இரவு அனுமதி இருக்கும்.