மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கான் இன்று ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்.
நேற்று பெயில் பாக்ஸ் சிறைக்கு வெளியில் வைக்கப்பட்டது. அதில் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவின் அசல் பத்திரம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள் ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிக்கும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு மணி நேரத்தில் ஆர்யான் கான் விடுவிக்கப்படுவார் என ஆர்தர் ரோடு சிறைச்சாலை கண்காணிப்பாளர் நிதின் வாய்ச்சால் தெரிவித்துள்ளார்.
ஆர்யான் கானுடன் கைதான அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா ஆகியோரும் விடுவிக்கப்படுகின்றனர். மூவரும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று என்சிபி அலுவலகத்தில் ஆஜராகி தாங்கள் தலைமறைவாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மூன்று வாரங்களுக்கும் முன் சிறையில் அடைபட்டிருந்த மகன் ஆர்யன் கானை அழைத்துச் செல்ல நடிகர் ஷாருக்கான் நேரில் செல்கிறார்.
மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். கடந்த 3 நாட்களாக அவர் ஆஜராகி தனது வாதத்தை வைத்தார்.
அப்போது அவர் ‘‘ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது. அது மிகப் பழைய உரையாடல், அதற்கும் அக்டோபர் 2 ஆம் தேதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை. ஆர்யன் கான் அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர். ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி ரிமாண்ட் விண்ணப்பம் தவறாக வழிநடத்துகிறது. ரிமாண்ட் விண்ணப்பத்தில் சரியான உண்மைகள் குறிப்பிடப்படவில்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.’’ எனக் கூறினார். மேலும் இன்று ஆஜரான முகுல் ரோஹத்கி தனது வாதங்கள் தொடர்பான ஆவணங்களையும் சமர்பித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.