பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக, வீட்டை விட்டு சென்று, யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடிய நொய்டா பெண், தன் குழந்தையின் முகத்தை தொலைக்காட்சிகளில் பார்த்து வீடு திரும்பினார்.
நொய்டாவைச் சேர்ந்த 29 வயதுப் பெண் ஷிப்ரா கட்டாரியா மாலிக். வீட்டின் அருகேயே பொட்டீக் ஒன்றை நடத்தி வருகிறார். ஷிப்ராவின் கணவர் சேத்தன் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறார். கடந்த திங்கள் கிழமையன்று காணாமல் போன ஷிப்ரா வெள்ளிக் கிழமை அன்று வீடு திரும்பினார்.
குடும்பத்துக்குளே ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி, வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்ததாக ஒப்புக்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறியவர், தன் 16 மாத ஆண் குழந்தை சர்வத்தை தொலைக்காட்சியில் பார்த்ததால் மனம் மாறி வீடு திரும்பியதாகக் கூறினார்.
இது குறித்துப் பேசிய உத்திரப்பிரதேச மாநில டி.ஐ.ஜி. லக்ஷ்மி சிங்,
"ஷிப்ரா எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. வெள்ளியன்று, இரவு 1.30 மணிக்கு தன் கணவரை தொலைபேசியில் அழைத்த ஷிப்ரா, தான் குர்ஹான் அருகே ஏதோ ஒரு கிராமத்தில் இருப்பதாகவும் கடத்தல்காரர்கள் தன்னை அங்கேயே வீசிவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நொய்டா போலீஸார், ஷிப்ராவை எவ்விதக் காயமும் இல்லாமல் கண்டுபிடித்தனர். அதற்குப் பிறகு நடந்த விசாரணையில், குடும்ப உறுப்பினர்களை சங்கடத்துக்கு உள்ளாக்காமல் இருக்க, கடத்தப்பட்டதாகப் பொய் கூறியதாகக் கூறினார்.
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, ஷிப்ரா திங்களன்று மதியம் 1 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார். தனது பொட்டீக்குக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சாந்தினி சவுக் செல்வதாகக் கூறிச் சென்றார். இதுபோன்ற பயணங்களை அவர் அடிக்கடி மேற்கொண்டிருப்பதால், குடும்பத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. சுமார் 1.35 மணி அளவில், வங்கி ஒன்றில் அவரைக் கடைசியாகக் காண முடிந்தது.
அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் செல்லும் பேருந்தில் ஏறி, ஆசிரமம் ஒன்றுக்குச் சென்று தங்கியிருக்கிறார்.
சுமார் 2.56 மணிக்கு, ஷிப்ராவின் மொபைல் போனில் இருந்து தென் டெல்லியில் இருக்கும் லாஜ்பாத் நகர் நகர் காவல்துறை 100-க்கு அழைப்பு சென்றிருக்கிறது.
திட்டத்தின் பின்னணி
சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவருக்கு, அங்குள்ள காடுகளைப் பற்றிய யோசனை வந்திருக்கிறது. கடத்தல்காரர்கள் தன்னைக் கடத்திவந்து இங்கேதான் வீசினார்கள் என்று சொல்லலாம் என்று திட்டமிட்டார் ஷிப்ரா.
சுல்தான்பூர் கிராமத்தை அடைந்தவர், இருட்டும் வரை காத்திருந்தார். இரவான பின்னர், கிராமத்தின் தலைவர் வீட்டுக்குச் சென்றவர், அவரின் தொலைபேசியைப் பயன்படுத்தி தன் கணவருக்கு போன் செய்திருக்கிறார்.
ஷிப்ராவின் கணவர் மாலிக் இது குறித்து கூறும்போது, ''என்னுடைய மனைவி குடும்பத்தின் பணக்கஷ்டத்தை நினைத்து மிகுந்த கவலையுடனே இருந்தார். என்னுடைய தொழில் நன்றாகப் போகாததாக நினைத்தார். அதனால் அவரின் தந்தை தொழிலும் கஷ்டப்படுவதாக எண்ணினார்" என்றார்.
கிரைம் நிகழ்ச்சிக்களால் கவரப்பட்ட ஷிப்ரா
ஷிப்ரா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கிரைம் நிகழ்ச்சிகளை அதிகம் விரும்புபவராக உள்ளார்.
இதுகுறித்துப் போலீஸிடம் தெரிவித்த ஷிப்ரா, தனது சுய கடத்தல் குறித்த யோசனை அத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்தே வந்ததாகக் கூறியுள்ளார். சவ்தான் இந்தியா, க்ரைம் பெட்ரோல் உள்ளிட்டவை தான் வழக்கமாகப் பார்க்கும் நிகழ்ச்சிகள் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து கூறிய டி.ஐ.ஜி. லக்ஷ்மி சிங், ''க்ரைம் பெட்ரோல் நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தில் இத்தகைய சம்பவம் வந்திருக்கக்கூடும் என்று நம்புகிறோம்'' என்றார்.
தமிழில்: ரமணி பிரபா தேவி