கர்நாடகா மாநில பள்ளியில் 33 மாணவர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டன.
கடந்த 25-ம் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைப்பிடிக்க அறி வுறுத்தப்பட்டது.
இந்நிலையில், குடகு மாவட்டத் தில் உள்ள மடிகேரியில் ஜவஹர் நவோதயா பள்ளியில் கடந்த 26-ம் தேதி 3 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த பள்ளியில் படிக்கும் 287 மாணவர்களுக்கும், அதில் பணியாற்றும் 18 ஊழியர் களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் 30 மாணவர்களுக்கும், ஒரு ஊழியருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குடகு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஹேமந்த் நேற்று பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, “கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்ட 34 பேருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 33 மாணவர்களும் 9 முதல் 12-ம் வகுப்பு களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்'' என்றார்.