இந்தியா

இந்த மூக்கை வைத்து கொண்டுதான் உத்தரப் பிரதேச முதல்வரானேன்: அகிலேஷ் யாதவ் நகைச்சுவை

பிடிஐ

‘‘என்னுடைய முகத்தை வரைவதற்கு மூக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மூக்கை வைத்து கொண்டுதான் உத்தரப் பிரதேச முதல்வரானேன்’’ என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

பிரபல அரசியல் தலைவர்களை கார்ட்டூன் வரையும்போது, அவர்களுடைய வித்தியாசமான அங்கங்களை குறிப்பாக வரைவது வழக்கமாக உள்ளது. குறிப்பிட்ட அங்கத்தை வைத்தே அவர் யார் என்பது தெரிந்துவிடும். அத்துடன் பார்த்தவுடன் சிரிப்பையும் வரவழைக்கும். அந்த வகையில், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் கார்ட்டூன் படங்கள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா லக்னோவில் நேற்று நடந்தது.

‘டிப்பு கா அப்சானா’ என்ற தலைப்பில் அந்த புத்தக்கத்தை வெளியிட்டு அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘எனக்கு மூக்கு வித்தியாசமாக இருப்பது ஒரு பிரச்சினையே இல்லை. இன்னும் சொல்ல போனால் அது கவர்ச்சி யாகதான் இருக்கிறது. என்னை பற்றிய பெரும்பாலான கார்ட்டூன் களில் மூக்கு, சிவப்பு தொப்பி, சைக்கிள் (சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னம்) ஆகியவைதான் பிரதான இடம் பிடித்துள்ளது. அது எனக்கு பெருமையாகவே இருக்கிறது’’ என்றார்.

‘கார்ட்டூன்களில் உங்கள் மூக்கை கேலி செய்வது பற்றி வருத்தம் உண்டா?’ என்று செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு அகிலேஷ் பதில் அளிக்கையில், ‘‘ஒரு முறை நான் கால் பந்தாட்டம் ஆடும்போது, என் மூக்கில் அடி பட்டு விட்டது. என் அப்பா (முலாயம் சிங்) என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். அவர், எனக்கு திருமணமாகி விட்டதா என்று கேட்டார். எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும், மூக்கை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறிவிட்டார். அதன்பின், இந்த மூக்கை வைத்து கொண்டுதான் முதல்வரானேன். இதுவும் அழகாகத்தான் இருக்கிறது’’ என்றார்.

இதுபோல் மேலும் பல கார்ட்டூன் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று புத்தக பதிப் பாளர்களை அகிலேஷ் கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT