இந்தியா

ம.பி.யில் ரூ.120-ஐ கடந்தது பெட்ரோல் விலை

செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்தது. டீசல் ரூ.110-ஐ நெருங்கிவிட்டது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைகளை ஒட்டி இருக்கும் பலகாட் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.119.23 ஆக உள்ளது. மத்தியபிரதேசத்தில் சில மாவட்டங்களில் ஏன் இந்த கடும் விலை உயர்வு என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சில மாவட்டங்களில் விலை உயர்வு ஏன்

அனுப்பூர் மாவட்டத்தின் பிஜூரி நகரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் அபிஷேக் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘அனுப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையன்று பெட்ரோல் விலை 36 பைசா அதிகரித்து லிட்டர் ரூ.120.4 பைசாவாகி உள்ளது. டீசல் விலை 37 காசுகள் அதிகரித்து ரூ.109.17 ஆக உள்ளது. அனுப்பூர் மாவட்டத்துக்கு சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள ஜபல்பூர் எண்ணெய் கிடங்கில் இருந்து பெட்ரோல் வருகிறது. இதனால், மற்ற பகுதிகளைவிட இங்கு பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது’’ என்றார்

அதேநேரம், தலைநகர் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.116.62 ஆகவும், டீசல் விலை ரூ.106.01 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. இதனால், அந்த மாநில எல்லைகளை ஒட்டி இருப்பவர்கள் அங்கு சென்று வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொள்வதால் விற்பனை பாதிக் கப்படுவதாக பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT