சூரியன், மெல்ல மெல்ல தன் சுட்டெரிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டான். பொதுவாக மே மாதத்தில் இருக்கும் உக்கிரம், இப்போது மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. வெயில் கொளுத்தும் இடங்களான விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில், இப்போது குடைபொருத்தப்பட்ட டூவீலர்கள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.
விஜயவாடாவின் கேதாரீஸ்வரர்பேட்டை சாலையில், குடை பொருத்தப்பட்ட டூவீலரை ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்ல, அது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த இரு சக்கர வாகனத்தை சிறப்பாக வடிவமைத்தது அஸ்ரானி எலக்ட்ரிக்கல் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த குனல் அஸ்ரானி. இது குறித்து அவரிடம் பேசினோம்.
"குடை பொருத்தப்பட்ட வண்டிகளை முதலில் நான் மும்பையில்தான் பார்த்தேன். கல்லூரி மாணவிகள் விதவிதமான வண்ணக்குடைகளை, இரு சக்கர வாகனங்களில் பொருத்தி, வெயிலின் தாக்கத்தில் இருந்தும், மழையின் ஜில்லிப்பில் இருந்தும் தப்பித்துக் கொண்டிருந்தனர். விஜயவாடாவின் அடிக்கும் வெயிலுக்கு இந்த குடை சரியாக இருக்கும் என்று கருதி இங்கே அறிமுகப்படுத்தினேன்.
பயன்படுத்துவது எப்படி?
தனிச்சிறப்புடன் தயாரிக்கப்பட்ட இந்தக் குடைகளை எந்த இரு சக்கர வாகனத்திலும் பொருத்தலாம். வீசும் எதிர்க்காற்றில் இருந்து தப்பிக்கும் விதத்தில்தான் அனைத்து குடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 - 70 கி.மீ. வேகம் வரை இந்தக் குடைகளைப் பயன்படுத்த முடியும். தேவைப்படாத நேரங்களில், குடையைக் கழற்றி வைத்துக் கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது" என்கிறார் அஸ்ரானி.
பொதுமக்களிடம் இந்தக் குடைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், இன்னும் அதிகக் குடைகளை விற்க முடிவு செய்திருக்கிறார் அஸ்ரானி. அரை வட்ட வடிவில் இருக்கும் இந்தக் குடையின் விலை சுமார் 1,600 ரூபாயாம்.