கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த பதில் வருமாறு:
மாநிலத்தில் இதுவரை 41 கர்ப்பிணி பெண்கள் கரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையின் படி கேரளாவில் கரோனா நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியப் பட்டோர் விகிதம் கடந்த 2020, மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் முறையே 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது. 2021 மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் மாநில அரசு நடத்திய நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வில் இது 82.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாநில மக்களில் ஒரு பெரும் பகுதியினர் கரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளதை மாநில அரசின் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பல்வேறு பிரிவு மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் மிக அதிக அளவாக, கடலோர மக்களில் 93.3 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பாற்றல் காணப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். - பிடிஐ