போலி நிறுவனங்கள் மற்றும் போலி ரசீதுகள் மூலம் ரூ.48 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக, 3 பேரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குனரகம் கைது செய்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இருவர், 20க்கு மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி, போலி ரசீதுகளை உருவாக்கி அதன் மூலம் ரூ.22 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி பெற்று மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடியை கண்டுபிடித்த குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகம், இருவரையும் கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இதேபோல், ஹரியாணா மாநிலம் படாடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சரக்குகளை அனுப்பாமல், போலி ரசீது மூலம் ரூ.26 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவரிடமிருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த இரு மோசடி வழக்குகள் தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.