கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய். 4.2 என்ற உருமாறிய கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது. ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.
நம் நாட்டில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக, டெல்டா வகையின் ஒரு பகுதியான இந்த வைரஸ் இருந்தது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதில் ஒன்றான ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் புதிய தொற்று தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில், கர்நாடகாவில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் உருமாறிய ஏஒய். 4.2 கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது பீதி அடைய தேவையில்லை என்று மாநில சுகாதார அதிகாரிகள், மரபணு நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் மரபணு வரிசைப்படுத்தப்பட்ட 1,300 க்கும் மேற்பட்ட மாதிரிகளை மறு ஆய்வு செய்ததில், ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் இந்த புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.