ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிச்சயம் உரையாற்றுவேன் என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த கண்ணய்யா, "ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக கூட்ட நடவடிக்கை குழுவால் அங்கு உரையாற்றுமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது. அதன் காரணமாகவே நான் இங்கு வந்துள்ளேன். மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதில் உறுதியாக இருக்கிறேன். ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் வளாகத்துக்கு வெளியிலாவது உரையாற்றுவேன். சமூக நீதியை நிலைநாட்டவே உரையாற்றவிருக்கிறேன். அதுதவிர ரோஹித் வெமுலாவின் தாயாரையும், சகோதரரையும் சந்திக்கவிருக்கிறேன்" என்றார்.
இதற்கிடையில், கண்ணய்யா குமார் உரையாற்ற தடை ஏற்பட்டால் செய்தியாளர்கள் சந்திப்பின்மூலம் அவரது கருத்துகளை முன்வைக்க இடதுசாரிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
வளாகத்தில் வன்முறை:
துணைவேந்தர் அப்பாராவ் விடுப்பு முடிந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், துணைவேந்தருக்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது அலுவலகம், தங்கும் விடுதி மற்றும் கார் ஆகியவை சூறையாடப்பட்டது. போலீஸார் நடத்திய தடியடியில் 44 மாணவர்கள் காயமடைந்தனர்.