கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததாலும், கோடை வெயில் கொளுத்துவதாலும் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால் காவிரி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து குறைவாக இருந்தது. இதேபோல கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழைப் பொழிவு குறைவாக இருந்ததால் கபினி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்தது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஓரளவுக்கு மழை பெய்ததால் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் மட்டும் முழு கொள்ளவை எட்டின. ஆனால் பெரிய நீர் தேக்கமான கிருஷ்ணராஜசாகர் முழு கொள்ளளவை (124.8 அடி) எட்டவில்லை. அக்டோபர் மாத இறுதியில் அதிகபட்சமாக 114.85 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் கர்நாடகாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெயில் கொளுத்துகிறது. ஏற்கெனவே போதிய மழை இல்லாததால், தற்போது நீர்மட்டம் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. இதனால் சிவனசமுத்திரம், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய இடங்களில் உள்ள நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே கர்நாடகா முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
விவசாயிகள் கவலை
கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 85 அடியாக குறைந்துள்ளது. இதேபோல கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிட பன்மடங்கு குறைந்துள்ளது. இதனால், 'கோடை மழை தொடங்கும் வரை பாசனத்துக்கு நீர் திறந்துவிட முடியாது' என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது. எனவே லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதே அளவு நீர்மட்டம் வரும் மே மாதம் வரை தொடர்ந்தால் கடும் மின்வெட்டும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக காவிரி நீரை நம்பியுள்ள பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 4 கோடி மக்கள் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.
இதுமட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள தமிழக மக்களும் குடிநீர் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும். எனவே கர்நாடக மக்கள் நீரை முடிந்தவரை வீணாக்காமல் குறைவாக பயன்படுத்த வேண்டும் என காவிரி நீர்ப்பாசன ஆணைய அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.