இந்தியா

ஆர்யன் கானுக்காக ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி: ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

ஏஎன்ஐ

ஆர்யன் கானுக்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று ஆஜரான நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். அப்போது அவர் "ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை என்று வாதாடினார். ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது. அது மிகப் பழைய உரையாடல் என்பதும், அதற்கும் அக்டோபர் 2 ஆம் தேதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிகிறது.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆர்யன் கான், அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர். ஆர்யன் கான் போதை மருந்து வாங்கியோ அல்லது உட்கொண்டோ இருந்து அவர் போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு தயாராக இருந்திருந்தால் இங்கு வழக்கு விசாரணைக்கே இடமிருந்திருக்காது.

ஆனால், ஆர்யன் கான் போதை மருந்து வாங்கவும் இல்லை. அவர், உட்கொள்ளவும் இல்லை. அதனால் அவர் தவறுதலாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆர்யன் கானின் நண்பர் அர்பாஸ் மெர்சன்டின் ஷூவுக்குள் இருந்து போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஆர்யன் கான் பொறுப்பாக முடியாது. அவருக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. எனவே ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.

இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால் நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது.

SCROLL FOR NEXT