கோப்புப்படம் 
இந்தியா

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்கப்படுமா?- உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு 

ஏஎன்ஐ

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கியது.

இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஒத்திவைத்தது.

பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில் மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா அல்லது இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

ஆனால், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் அரசால் தாக்கல் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையதாக இருப்பதால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது. என்னவிதமான மென்பொருள் கண்காணிப்புக்கும், உளவுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதைத் தெரிவிக்க இயலாது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT