சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | கோப்புப்படம் 
இந்தியா

பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மக்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சஞ்சய் ராவத்

ஏஎன்ஐ

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதற்கு காஷ்மீரில் உள்ள மக்கள் கொண்டாடியதைச் சாதாரணமாக எடுக்கக்கூடாது என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அதை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தபோது, அப்போது பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் மக்கள் கொண்டாடியுள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வியையும், பாகிஸ்தான் வெற்றியையும் காஷ்மீர் மக்கள் கொண்டாடியது உண்மையில் கவலைக்குரிய விஷயம்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் தோல்வியை வரவேற்றது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். அதிலும் 3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மத்திய அரசு இதை தீவிரமாகக் கருதி என்ன என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஜெய்ஹிந்த்’’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT