நாடு கடந்த திபெத் அரசின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான 16-வது நாடாளுமன்ற தேர்தல் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தர்மசாலாவில் வசிக்கும் ஏராளமான திபெத்தியர்கள் உற்சாகமாக வாக் களித்தனர். இதுதவிர, பெங்களூரு, டார்ஜீலிங், பைலாகுப்பி, டேராடூன் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் திபெத்தியர்களும் வாக்களித்தனர்.
மொத்தம் உள்ள 45 இடங்களுக்கு 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள திபெத்தியர்கள் வாக்களித்து வருகின்றனர்.
எனினும், இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் திபெத் ஆன்மிக தலைவரான தலாய் லாமா வின் பெயர் இல்லை. இவர் 2011-ல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். இதில் பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 27-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இப்போது பிரதமராக உள்ள லோப்சாங் சங்கேவின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. மீண்டும் போட்டியிடும் இவரும் திபெத் நாடாளுமன்ற சபாநாயகர் பென்பா செரிங்கும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளனர்.