இந்தியா

‘‘என்னை குறி வைத்து தாக்குகிறார்கள்’’- அமைச்சர் நவாப் மாலிக் ட்வீட்; சமீர் வான்கடே பதில் மனு

செய்திப்பிரிவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் உறவினரான சமீர் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் என்னை குறி வைத்து தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகின்றனர் என சமீர் வான்கடே பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கடந்த 3-ம் தேதி கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரபாகர் செயில் கூறும்போது, “போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்னிடம் 9 முதல் 10 வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்சிபிஅதிகாரிகளும், மேலும் சிலரும்ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக் கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர்” என்றார்

ஆனால் இதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் மும்பை நீதிமன்றத்தில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியின் தனிப்பட்ட ஆவணங்களை ட்வீட் செய்து போலி என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீர் வான்கடே தனிப்பட்ட முறையில் மும்பை நீதிமன்றத்தில் இரண்டாவது பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

தனிப்பட்ட முறையில் என்னை குறிவைத்துள்ளனர்., குறிப்பாக அறியப்பட்ட ஒரு அரசியல் பிரமுகர் இதை செய்கிறார். அவது உறவினரான சமீர் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்துடன் இது நடந்துள்ளது.

எனது தனிப்பட்ட ஆவணங்களை வெளியிடுவது அவதூறான இயல்பு மற்றும் எனது குடும்ப தனியுரிமையில் தேவையற்ற தலையீடு. இது என்னையும், எனது குடும்பத்தையும், என் தந்தையையும், என் மறைந்த தாயையும் அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டது.

அமைச்சரின் நடவடிக்கைகள் எனது குடும்பத்தை மிகுந்த மன மற்றும் உணர்ச்சி அழுத்தத்திற்கு உட்படுத்தியது. மேலும் அவரது அவதூறு மூலம் வேதனை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்துள்ளது.

SCROLL FOR NEXT