டி-20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து காஷ்மீரி மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு உமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவின் கிரிக்கெட் தோல்விக்கு பரவலான விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் விளையாட்டை, விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பலர் சர்ச்சைகளை எழுப்பிவந்தனர். கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளன.
மாணவர் தலைவர் நசீர் குஹாமி, தனது ட்விட்டர் பதிவில், பஞ்சாபில் உள்ள சங்ரூர் மற்றும் கராரில் (மொஹாலி) காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும், உள்ளூர் பஞ்சாபிகள் தங்கள் மீட்புக்கு வந்ததாக தாக்கப்பட்ட மாணவர்கள் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார்.
"பிஹார், உபி (உத்தரப் பிரதேசம்) மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் காஷ்மீர் மாணவர்களின் அறைகளில் நுழைந்து அவர்களை வெறித்தனமாக தாக்கினர்" என்று நசீர் குஹேமி தனது ட்வீட் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"பஞ்சாபில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்றிரவு சில காஷ்மீர் மாணவர்கள் மீது உடல்ரீதியாகவும் தகாத வார்த்தைகளாலும் தாக்கப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டது வேதனை அளிக்கிறது. பஞ்சாப் முதல்வர் சரண் ஜித் சன்னா இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தாக்குதலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆறுதல் கூறி நம்பிக்கையளிக்கும்படியும், இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் பஞ்சாப் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.