டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்து ட்விட் செய்த காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
கடந்த 1992ம் ஆண்டு சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்றது.
இந்திய அணியின் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராதிகா கேரா சர்ச்சைக்குரிய வார்த்தைகளைக் கூறி கிண்டல் செய்திருந்தார். அதில் “ பக்தாஸ்! தோல்வியின் ருசி எப்படி இருந்தது? உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொண்டு சமாளிப்பீர்கள்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் நிர்வாகி ராதிகாவின் ட்விட்டர் கருத்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில் “ இன்று காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியாக இருக்கும். ஆமாம் தானே.2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி இந்த தேசத்தில்தானே சந்திக்கப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை போட்டியிட வைக்க முயல்வார்களா? “ எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித் அளித்த பேட்டியில் “ விளையாட்டில் எந்த விதத்திலும் அரசியல் கலக்கக் கூடாது. எந்த அரசியலும் இருக்கக் கூடாது. நான் யார் கூறிய கருத்துக்கு ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் இல்லை. விளையாட்டு விளையாட்டுதான். இதுதான் உண்மை. இரு அரசுகளுக்கு இடையே பிரச்சினைகள் இருந்தாலும், விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது. எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்கூடாது”எனத் தெரிவித்தார்