ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு வங்க மாநிலப் பிரிவு மொத்தமும் பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளதாக, பாஜகவின் மாநிலத் தலைவர் ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதீப் கோஷ் இன்னும் சில நாட்களில் பாஜகவில் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார். இதை கோஷ் உறுதிசெய்துள்ளார். இதோடு, இடது சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருவதாக சின்ஹா கூறினார்.
மேற்கு வங்கத்தில் பாஜக கட்சியின் தொடர் வளர்ச்சியைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சிப் பிரிவினர், பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளனர்.
ஆம் ஆத்மி தலைவர் அமித் குமார் கூறுகையில், மாநிலத்தில் மக்களுக்காக போராட பாஜக மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியை அடுத்து, மாநிலத்தில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சிக் குழுக்கள் அனைத்தையும், மாநிலத் தலைவர் அதிர் சவுத்ரி கலைக்க முடிவெடுத்தார். இதனால், மத்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவர் கோஷ் அதிருப்தி அடைந்தார். இதுவே அவர் கட்சி மாறக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியனர் பலர் திரினாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளதை அடுத்து, கோஷின் இந்த முடிவு, கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.