நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமைச்சர்கள் அளித்த விளக்கங்கள், உறுப்பினர்கள் கோரிக்கைகள் வருமாறு:
அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்:
இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு கூடுதல் உணவுப் பொருட்கள் ஒதுக்கப்படும். நீர்ப்பாசன திட்ட டீசல் மானியத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோட்டப் பயிர் பாசன மேம்பாட்டுக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த பதுக்கல்காரர்களிடம் இருந்து 1,26,759 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1,23,386 டன் பருப்பு சந்தையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த்
: நமது நாட்டில் ‘சிந்து’ என்ற பெயரில் எந்த மாநிலமோ, பகுதியோ இல்லை. எனவே தேசிய கீதத்தில் இருந்து அந்த வார்த்தையை நீக்கிவிட்டு பொருத்தமான வேறு வார்த்தையை இணைக்க வேண்டும்.
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:
உத்தராகண்ட், காஷ்மீர் மாநிலங்களில் அதிக மழை பெய்ததை பருவநிலை மாற்றத்தோடு ஒப்பிட முடியாது. இது முழுக்க முழுக்க உள்ளூர் வானிலை தொடர்பானது. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற பலத்த மழை பெய்வது இயல்பானது.
அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி:
ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் காஷ்மீர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம்
: இந்தியாவில் தயாராகும் சுமார் 700 மருந்து வகைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் சுமுக தீர்வு காணப்படும்.
அமைச்சர் ஜெயந்த் சின்ஹா:
டிடிஎஸ் வரி பிடித்தம் தொடர்பாக 49 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 80 சதவீத புகார்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. வரி செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 4.18 லட்சம் கோடியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்த நீதிபதி ஈஸ்வர் தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண் ஜேட்லி:
கடந்த 2013, 2014, 2015 ஆகிய நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன. சுமார் 460 தனியார் நிறுவனங்கள் சமூக நல சேவைக்காக ரூ.6337 கோடியை செலவு செய்துள்ளன. இதில் 266 நிறுவனங்கள் மிகக் குறைவான தொகையை மட்டுமே சமூக சேவைக்காக ஒதுக்கியுள்ளன.
அமைச்சர் ஜே.பி. நட்டா
: நாட்டில் மிக அதிகபட்சமாக இதய நோயால் 12.4 சதவீதம் பேரும் நுரையீரல் தொடர்பான நோய்களால் 10.8 சதவீதம் பேரும் உயிரிழக்கின்றனர். வரும் 2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க தேசிய அளவிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புகையிலை தடையை மீறியவர்களிடம் இருந்து கடந்த 2012 முதல் 2015 செப்டம்பர் வரை ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக்:
வாடகை தாய்கள் விவகாரத்தில் பணத்துக்காக முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வகையில் பிறக்கும் குழந்தைகள் நலன் ஆகியவற்றை கருத்திற் கொண்டு புதிய மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் பட்டியல் மாற்றம்:
தாழ்த்தப்பட்டோர் பட்டியலை மறுஆய்வு செய்ய வகை செய்யும் புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி சத்தீஸ்கர், ஹரியாணா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட உள்ளது.