காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் அடங்கிய புதிய தேர்தல் கூட்டணி பிப்ரவரிக்குள் உருவாகிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் சனிக்கிழமை தெரிவித்தார்.
எர்ணாகுளம் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காரத் கூறியதாவது:
பாஜகவையும் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் வீழ்த்தக் கூடிய நிலையில் காங்கிரஸோ அதன் கூட்டணிக் கட்சிகளோ இல்லை. பாஜகவையும் மோடியையும் வீழ்த்திட காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைப்பதுதான் ஒரே வழி.
காங்கிரஸ், பாஜக அல்லாத பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி அமைப்பதில் இணக்கம் காணும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் இறங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் அடங்கிய இது போன்ற கூட்டணி இதற்கு முன்னர் தேர்தலுக்குப் பின்னர் அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி ஏற்பட பிராந்திய நிலையில் முயற்சி மேற் கொண்டு வருகிறோம். பல்வேறு கட்சிகளுடன் தொடர்பில் உள்ளோம். எல்லா கட்சிகளு டனும் விரிவாக பேசி வருகிறோம்.
பிப்ரவரி ஆரம்பித்திலேயே கூட்டணி இறுதியாகிவிடும். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை பலத்துடன் எதிர்த்து நிற்க தேவையான கூட்டணியை அமைப்போம்.
டெல்லியில் அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்த நடுத்தர வர்க்கத்தினரை ஆம் ஆத்மி ஈர்த்துள்ளது நல்ல செயல். இருப்பினும், இடதுசாரிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வரமுடியாது. அதன் திட்டங்களையும் கொள்கை களையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சில பூஷ்வா கட்சிகளுக்கு மாற்றுதான் ஆம் ஆத்மி . வகுப்பு வாத பிரச்சினையில் தனது நிலை என்ன என்பதை அந்த கட்சி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இடதுசாரி கட்சிகள் பெரிய அளவில் வளரவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். பெருநகரங்களில் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடது சாரிகள் மீதான ஆர்வம் குறைந்துவருகிறது.