ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி | படம் ஏஎன்ஐ 
இந்தியா

100 கோடி இல்லை; 31% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள்: அசாசுதீன் ஒவைசி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நாட்டில் 100 கோடி மக்களும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தவில்லை, 31 சதவீ மக்கள் மட்டுமே இரு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளார்கள் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 21ம் தேதியோடு 100 கோடியை எட்டியது. ஏறக்குறைய 10 மாதங்களில் இந்தியாவில் 100 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இதை எம்.பி. அசாசுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரைவத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதிருந்த ஒவைசி தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். மீரட் மாவட்டத்தில் உள்ள கிதோர் எனுமிடத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அசாசுதீன் ஒவைசி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி நாட்டில் 100 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாகக் கூறுகிறார். உண்மையில், 31 சதவீத மக்கள் மட்டும்தான் இரு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், இப்போதிருந்தே முஸ்லிம்கள், தலித் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படுகின்றன.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உங்களிடம் (மக்கள்) வருவார்கள், கனிவுடன் பேசி வாக்குக் கேட்பார்கள். உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல், கருணை இருப்பதுபோல் பேசுவார்கள் ஆனால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடியை அசாசுதீன் ஒவைசி விமர்சித்திருந்தார். அதில் “ மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியபோது, மாநிலங்களையும், மக்களையும் அவர்கள் தலைவிதி எனக் கைவிட்டதுவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடுப்பூசிக் கொள்கையை ஆய்வு செய்தபின்புதான், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைத்தது, மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையும் மாற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT