மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பழைய இரும்புக் கடையில் மொத்தமாக விற்பனைக்கு வந்துள்ளன.
சமையல் சிலிண்டர் விலை கடும் விலை ஏற்றம் காரணமாக சிலிண்டர் வாங்க முடியாத ஏழைக் குடும்பத்தின் பயணாளிகள் சிலிண்டரை இரும்பு விலைக்கு விற்பனை செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் உடைப்பதற்காக ஏராளமான சமையல் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிலிண்டர்களி்ல் உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கிய சிலிண்டர்கள் எவ்வாறு இரும்புக்க டைக்கு வந்துள்ளன என்ற கேள்வியை எழுப்புகின்றன
இது குறித்து காங்கிஸ் கட்சியி்ன் மூத்ததலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் , இரும்புக் கடையில் சிலிண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “ இரும்புக் கடையில் குவிக்கப்பட்டிருக்கும் சமையல் சிலிண்டர்கள் பிரதமர் மோடியின் ஆட்சியி்ல் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வைக் காட்டுகின்றன. ஜபல்பூரில் ஒரு மாதத்துக்கு முன்புதான், மத்திய அமைச்சர் அமித் ஷா உஜ்வாலா திட்டத்தின் 2-வது பகுதியைத் தொடங்கிவைத்தார் அதற்குள் இந்த நிலைமை” எனத் தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் பெற்ற பயணாளிகள் பலரிடம் தனியார் செய்தி சேனல் தொடர்பு கொண்டு கேட்டுள்ளது. ஒரு பெண் கூறுகையில் “ சிலிண்டர் விலை கடுமையாக அதிகரித்ததால் அடுத்த சிலிண்டர் வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை.நாங்கள் தினக்கூலிகள். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஒருநாள் வேலைக்குச்செல்லாவிட்டாலே பணப்பற்றாக்குறை ஏற்படும். இதில் எவ்வாறு சிலிண்டரை நிரப்ப முடியும். சிலிண்டர் விலை 600ரூபாய்க்கு மேல் உயர்ந்தபோதே மறு சிலிண்டர் வாங்குவதை நிறுத்திவிட்டோம்” எனத் தெரிவித்தார்.
பிந்த் மாவட்டத்தின் சப்ளை அதிகாரி அவ்தேஷ் பாண்டே கூறுகையில் “ காலியானசிலிண்டர்கள் இரும்புக்கடைக்குவிற்பனைக்கு வந்தது எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்கப்படும். உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு இலவசமாக சிலிண்டர், அடுப்பு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். ஆனால், இலவசமாக சிலிண்டரை நிரப்பித் தரமாட்டோம்” எனத் தெரிவித்தார்
மத்தியப்பிரதேச அரசின் புள்ளிவிவரங்கள்படி, பிந்த் மாவட்டத்தில் 2.76 லட்சம் குடும்பங்கள் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலை வெளிச்சந்தையில் ரூ.983க்கு விற்பனை செய்யப்படுகிறது