ஷாருக்கான் மட்டும் பாஜகவில் இணைந்தால் போதை மருந்து சர்க்கரையாகிவிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான சக்கன் பூஜ்பால் தெரிவித்துள்ளார்.
சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தி நடிகை அனன்யா பாண்டேயிடம் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரனை நடத்தினர். அப்போது போதை மருந்துகளை வழங்கியதாக அல்லது பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அனன்யா பாண்டே மறுத்ததாக கூறப்படுகிறது.
22 வயதாகும் அனன்யா பாண்டே, பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டே, நடிகை பாவனா பாண்டே ஆகியோரின் மகள் ஆவார்.
இந்தச் சூழலில் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சக்கன் பூஜ்பால் ஷாருக்கான் மட்டும் பாஜகவில் இணைந்தால் போதை மருந்து சர்க்கரையாகிவிடும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
சக்கன் பூஜ்பால் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்குக் கடத்தி வரப்பட்ட 3000 கிலோ கஞ்சாவைப் பற்றி என்சிபி விட்டுவிட்டது. மாறாக மும்பை சொகுசுக் கப்பலில் ஆர்யன் கானை கைது செய்து விசாரித்து வருகிறது. ஷாருக்கானுக்கு நெருக்கடி கொடுப்பதே தேசிய போதைப் பொருள் தடுப்பு ஆணையமான என்சிபி முக்கியமாகக் கொண்டுள்ளது. இப்போது மட்டும் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதை மருந்து சர்க்கரையாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.