இந்தியா

எம்பிஏ மாணவர் போலி என்கவுன்ட்டர் வழக்கு: ஜூன் 9-ல் தண்டனை விபரம்

செய்திப்பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் 2009-ம் ஆண்டில் எம்பிஏ மாணவர் ஒருவர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் ஜூன் 9-ல் டெல்லி நீதிமன்றம் தண்டனை விபரம் அறிவிக்கிறது.

எம்பிஏ மாணவர் போலி என்கவுன்ட்டரில் 18 போலீஸாருக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி நீதிமன்றம் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

இவர்களுக்கான தண்டனையை முடிவு செய்ய சனிக்கிழமை விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் வரும் திங்கள் கிழமை தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

2009-ல் உத்தரகண்ட் மாநிலத்தில் ரணவீர் சிங் (22) என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள், உள்ளிட்ட 18 போலீஸாருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் கூறினார்.

என்கவுன்ட்டரில் தொடர்பு உள்ளவர்கள் என அறிவிக்கப் பட்ட18 போலீஸாரில் 7 பேர் கொலைக்காகவும் மற்றவர்கள் மாணவரை கடத்தி, இதர சதி வேலைகளில் ஈடுபட்டதற்காகவும் தண்டிக்கப்படுவார்கள் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

கொலைக் குற்றம் செய்தவர்களாக சந்தோஷ் குமார் ஜெய்ஸ்வால், கோபால் தத் பட் (போலீஸ் நிலைய அலுவலர்), ராஜேஷ் பிஷ்ட், நீரஜ் குமார், நிதின் சௌகான், சந்தர் மோகன் சிங் ராவத் ஆகிய சப் இன்ஸ்பெக்டர்களும் கான்ஸ்டபிள் அஜித் சிங்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட்டுக்கு 2009 ஜூலை மாதம் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் சென்றபோது ரணவீர் சிங் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது.

SCROLL FOR NEXT