நீதிமன்றங்களின் கட்டமைப்பு களை மேம்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடங்களை அவர் நேற்று திறந்துவைத்தார். அவர் பேசியதாவது:
நான் நீதிமன்ற படியேறியது இல்லை என்று பலர் பெருமையாக கூறுகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். சமானிய மக்கள்தங்கள் வாழ்க்கையில் பல்வேறுபிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த பிரச்சினைகளில் நியாயம் வேண்டி நீதிமன்றங்களை நாட மக்கள் தயங்கக்கூடாது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையே ஜனநாயகத்தின் பலம் ஆகும். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில்அரசமைப்பு சாசன உரிமைகள்,தனிநபர்களின் சுதந்திரத்தை இந்திய நீதிமன்றங்கள் உறுதி செய்கின்றன.
இந்தியாவில் நீதிமன்றங்களின் கட்டமைப்பு திருப்திகரமாக இல்லை. நாட்டில் நீதித் துறை அலுவலர்களின் எண்ணிக்கை 24,280 ஆக உள்ளது. நாடு முழுவதும் 20,143 நீதிமன்ற கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. இதில் 620 நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
சுமார் 26 சதவீத நீதிமன்றங்களில் பெண்களுக்காக தனி கழிப்பறை வசதி இல்லை. சுமார் 16 சதவீத நீதிமன்றங்களில் ஆண்களுக்கான கழிப்பறை இல்லை. 54 சதவீத நீதிமன்றங்களில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. 5 சதவீத நீதிமன்றங்களில் மட்டுமே மருத்துவ வசதி உள்ளது. 32 சதவீத நீதிமன்றங்களில் மட்டுமே பதிவேடு அறைகள் உள்ளன. 51 சதவீத நீதிமன்றங்களில் மட்டுமே நூலக வசதி உள்ளது. 27 சதவீத நீதிமன்றங்களில் மட்டுமே காணொலி வசதி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை நீதிமன்றங்களின் கட்டமைப்புகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக நீதிமன்றங்கள் செயல்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. இதற்கு தீர்வு காண நாடு முழுவதும் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார். அவர் பேசும்போது, "ஜனநாயகத்தின் ஆணிவேர் அரசியல். ஆனால் நீதித்துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது. நீதித் துறையை பொறுத்தவரை நாம் குழுவாக செயல்படுகிறோம்" என்று தெரிவித்தார்.
மத்திய சட்ட அமைச்சரின் முன்னிலையில் நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் பெற் றுள்ளது.