போதைப் பொருள் வழக்கில் என்னை சிக்க வைக்க என்சிபி அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் குற்றம் சாட்டிஉள்ளார்.
மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதைஎதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில் ஆர்யன் கான் கூறுகையில், "எனது வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றங்களுக்கு தவறான அர்த்தம் கற்பித்து போதைப் பொருள் வழக்கில் என்னை சிக்க வைக்க என்சிபிஅதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். என்னிடம் இருந்து போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றவில்லை. அர்பாஸ் மெர்சன்ட், ஆசித் குமாரை தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. எனக்கு எதிராக சதி நடக்கிறது" என்று ஆர்யன் கான் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு 26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவார் என்று தெரிகிறது. இதனால் ஆர்யன் கானுக்கு சிக்கல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.