மத்திய அமைச்சரவை பரிந் துரையின்பேரில் உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. இது ஜனநாயக படுகொலை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
2012 ஜனவரி 30-ம் தேதி உத்தரா கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 32 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜகவுக்கு 31 இடம் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், இதர கட்சிகளைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் பகுகுணா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
உட்கட்சி குழப்பம் காரணமாக பகுகுணா பதவி விலகி 2014 பிப்ரவரி 1-ம் தேதி ஹரீஷ் ராவத் முதல்வராகப் பதவியேற்றார். அதன்பின் 2014 ஜூலையில் நடந்த இடைத்தேர்தலில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் மூலம் சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 35 ஆக உயர்ந்தது.
9 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
எனினும் ஆரம்பம் முதலே விஜய் பகுகுணாவுக்கும் ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்தப் பின்னணியில் கடந்த 18-ம் தேதி விஜய் பகுகுணா தலைமையில் 9 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
பட்ஜெட் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 9 எம்எல்ஏக் களும் சட்டப்பேரவையில் வலி யுறுத்தினர். இதை நிராகரித்த சபா நாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
பின்னர் 9 அதிருப்தி எம்எல்ஏக் களும் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து, ஹரீஷ் ராவத் ஆட்சியை கலைக்கக் கோரி மனு அளித்தனர். அதன்பேரில் மார்ச் 28-ம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்குமாறு அரசிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கட்சித் தாவல் தடை சட்டத்தில் 9 எம்எல்ஏக் களையும் நீக்குவது தொடர்பாக பதில் அளிக்குமாறு சபாநாயகர் கோவிந்த் சிங், அவர்களுக்கு நோட் டீஸ் அனுப்பினார். அவர்கள் 9 பேரும் தகுதிநீக்கம் செய்யப்படு வது உறுதி என்று தகவல்கள் வெளியாயின.
இதன்மூலம் மாநில சட்டப் பேரவையின் மொத்த பலம் 61 ஆக குறையும். ஒரு நியமன எம்எல்ஏ உட்பட காங்கிரஸுக்கு 27 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் முற்போக்கு ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எளிதாக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் அசாமில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண் டிருந்த பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு டெல்லி திரும்பி னார். அன்றிரவே அவரது தலை மையில் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 356-வது சட்டப்பிரிவில் உத்தராகண்ட் அரசை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்று அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று பிரகடனம் செய்தார்.
ஹரீஷ் ராவத் கண்டனம்
இதுகுறித்து மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் டேராடூனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை. பிரதமர் நரேந்திர மோடி தனது கையை ரத்தத்தில் நனைத்துள்ளார்.
நான் பதவியேற்றதுமுதலே எனது ஆட்சியை கலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இப்போது ஜனநாயக படுகொலையை துணிந்து செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நேற்று கூறிய போது, கடந்த 18-ம் தேதியே உத்தராகண்ட் அரசு பெரும்பான் மையை இழந்துவிட்டது. அதனால் தான் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
9 பேரின் பதவி பறிப்பு
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் உத்தராகண்ட் சட்டப்பேரவை சபா நாயகர் கோவிந்த் சிங் டேராடூனில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியபோது, அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரும் ஞாயிற்றுக் கிழமை மதியம் முதல் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டனர் என்று தெரிவித்தார்.