கோப்புப் படம் 
இந்தியா

‘‘100 கோடி தடுப்பூசி- கண்டுபிடிப்பு திறனுக்கு சான்று’’- இந்தியாவை பாராட்டிய பில்கேட்ஸ்; நன்றி சொன்ன பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

100 கோடி தடுப்பூசி செலுத்தியது இந்தியாவின் கண்டுபிடிப்பு திறனுக்கு சான்று என பாராட்டு தெரிவித்துள்ள பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த ஜனவரி 16ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருந்தது.

ஆனால்,மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்த தீவிர நடவடிக்கையால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டினர். கடந்த 10 மாதங்களில் 100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது. 100 கோடி எனும் இலக்கை இந்தியா எட்டியதற்கு உலக சுகாதார அமைப்பு, உள்ளிட்டவை பாராட்டுகள் தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியா 100 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தி செய்யும் திறன், கோவின் செயலின் உதவியுடன் லட்சக்கணக்கன சுகாதார ஊழியர்களின் முயற்சிகளுக்கான சான்றாக இது உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், இந்திய சுகாதார அமைச்சர், அமைச்சகம் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’’என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பில்கேட்ஸ்க்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 100 கோடி தடுப்பூசி மைல்கல்லை எட்டுவதில் இந்திய விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் முயற்சிகளுக்கு நீங்கள் தெரிவித்த பாராட்டுக்காக நன்றி பில்கேட்ஸ். கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியா உறுதியான பங்குதாரராக தொடர்ந்து நீடித்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT