இந்தியா

பலாத்காரம் நடப்பதற்கு கழிப்பறைகள் இல்லாததே காரணம்

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யின் பதாயூவில் நிகழ்ந்த பலாத்கார சம்பவத்துக்கு அங்கு கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் கழிப்பறைகள் கட்டித்தர, சமூக நல அமைப்பான சுலப் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது.

பதாயூவின் கட்ரா சஹாதத்கன்ச் கிராமத்தில் கடந்த மே 27-ம் தேதி 14 மற்றும் 15 வயதான, இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அவர்கள் வீட்டில் கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அந்த கிராம மக்கள் கூறுகையில், “உ.பி.யில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது. குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது. இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலி களமாகிவிடுகிறது” என்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பொதுக் கழிவறைகள் கட்டி சமூகப்பணி செய்துவரும் சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு, கட்ரா கிராமத்தில் உள்ள சுமார் 100 வீடுகளில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வந்துள்ளது.

இது குறித்து அதன் நிறுவனர் பிந்தேஷ்வர் பாதக் கூறுகையில், “காலைக்கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது. இதை அரசுகள் தங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். “முதலில் கழிப்பறை, பிறகுதான் கோயில்” என பிரதமர் மோடி குரல் கொடுத்ததன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இதற்காக அரசுடன் இணைந்து நாங்கள் முன்மாதிரியாக கட்ரா கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டித்தர தயாராக இருக்கிறோம்” என்றார்.

கழிப்பிடம் செல்லும் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவது நாட்டில் இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரலில் ஹரியாணாவின் பகானா கிராமத்தில் 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து மணமாகி அருகிலுள்ள பிகா பலோத் கிராமத்துக்கு மாமியார் வீடு சென்ற புதுமணப் பெண், அங்கு கழிப்பறை இல்லாததால் தம்மால் வாழ முடியாது எனவும், அதை கட்டினால் திரும்பி வருவதாகவும் கூறி தாய் வீடு வந்து விட்டார்.

பாராட்டு விழா

இந்தச் செய்தியை பார்த்து அங்கு சுலப் இன்டர்நேஷனல் கழிப்பறை கட்டித் தந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் நடந்தது.

2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, நாட்டில் 53 சதவீத மக்களின் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.

இது இந்திய கிராமங்களில் 62.9 சதவீதம் எனவும், வட மாநிலங்களான பிஹார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் ஆகியவற்றில் 78 சதவீதம் எனவும் வெளியானது.

கழிப்பறைகள் எண்ணிக்கை, உ.பி.யில் 2014 வரை 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் :

உ.பி.யின் பரெய்லி மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, ‘ஆசிட்’டை குடிக்கச் செய்து, பின் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இப்பெண்ணின் உடல் அயித்புரா என்ற கிராமத்தின் வயல்வெளியில் இருந்து கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதுபற்றி போலீஸார் கூறுகையில், “அப்பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுந்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் வயிற்றில் ஆசிட் காணப்பட்டது. கொல்லப்படுவதற்கு முன் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கச் செய்திருக்கலாம். கொலைக்குப் பின் ஆசிட் மற்றும் பெட்ரோல் மூலம் முகம் சிதைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT