காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் | கோப்புப்படம் 
இந்தியா

100 கோடி தடுப்பூசி: மத்திய அரசை பாராட்டிய சசி தரூர்; பதிலடி கொடுத்த காங்கிரஸ்

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துவிட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மத்திய அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தார். ஆனால், சசி தரூருக்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த ஜனவரி 16ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருந்தது.

ஆனால்,மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்த தீவிர நடவடிக்கையால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டினர். கடந்த 10 மாதங்களில் 100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது. 100 கோடி எனும் இலக்கை இன்று இந்தியா எட்டியதற்கு பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பு, உள்ளிட்டவை பாராட்டுகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்ட பாராட்டுச் செய்தியில் “ அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இதற்கு மத்திய அரசுக்குத்தான் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். கரோனா 2-வது அலையை சரியாக மேலாண்மை செய்யத் தவறியது,போதுமான அளவு தடுப்பூசி இருந்திருந்தால் தடுத்திருக்கலாம். அந்த தவற்றை மத்திய அரசு பாதியளவு திருத்திவிட்டது. ஆனால், கடந்த கால தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ட்விட்டுக்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா பதில் அளித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ கரோனா பரலை சரியாகத் தடுக்காமல் , தவறான மேலாண்மை, நிர்வாகத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, குணமடைந்தபின்பும் இன்னும் பக்கவிளைவுகளால் இருப்பவர்களை அவமதிப்பதாக சசி தரூர் கருத்து இருக்கிறது. இந்த விஷயத்துக்கு பாராட்டு பெறுவதற்கு முன் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இந்த பாராட்டுகள் அனைத்தும் அறிவியல் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் சேரும் “ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT