சவுதி அரேபிய அரசுடன் கையெழுத்தான உடன்பாட்டின் படி இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவுக் கான ஒதுக்கீடு 1,36,020 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 100,020 யாத்ரீகர்கள் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும் மற்றவர்கள் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமும் அனுமதிக்கப்படுவர்.
வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் தலைமையில் சவுதி அரேபியா சென்றிருந்த இந்தியப் பிரதிநிதிகள், ஜெட்டா நகரில் நேற்று முன்தினம் இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அப்போது, ஹஜ் யாத்ரீகர் களுக்கு நல்ல உணவு வழங்குவது உட்பட ஹஜ் தொடர்பான பல்வேறு விஷயங்களை சவுதி அரேபிய அரசுடன் இந்தியப் பிரதிநிதிகள் விவாதித்தனர்.
இந்த ஆண்டு ஹஜ் தொடர்பான பணிகளில் கூடுதல் ஒருங்கிணைப்புடன் செயல்படவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மெக்காவில் பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு அனைத்து நாடுகளுக்கும் ஹஜ் ஒதுக்கீட்டை சவுதி அரேபிய அரசு 20 சதவீதம் குறைத்துள்ளது. உள்நாட்டு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கான ஒதுக்கீட்டை 50 சதவீதம் குறைத்துள்ளது.