கடந்த1990ம் ஆண்டு இந்தியா இருந்ததைவிட, தற்போது 15 சதவீதம் கூடுதலாக வெப்பத்தால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்று லான்சென்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் மற்றும் பருவநிலை மாறுபாடு குறித்து தி லான்செட் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மனிதர்களி்ன் உடல்நலம் மற்றும் காலநிலைக்கு இடையிலான தொடர்பு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1990ம் ஆண்டில் இருந்ததைவிட, தற்போது இந்தியா வெப்பத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் 15 சதவீதம் அதிகரி்த்துள்ளது. கடந்த 2020்ம் ஆண்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 310 கோடிபேர் உலகளவில் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக, 29500 கோடி நேரங்கள் உழைக்கும் நேரம் வீணாகிவிட்டது. இதில் குறிப்பாக மனித வளம் அதிகமாக இருக்கும் பாகி்ஸ்தான், வங்கதேசம், இந்தியாவில் இந்த இழப்பு அதிகமாகும். உலகின் சராசரி வேலைநேர இழப்பு 216 முதல் 261 ஆகஇருந்த நிலையில் அதைவிட 2.5 முதல் 3 மடங்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்துள்ளது.
கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில்தான் இந்தியா, பிரேசில் இரு நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. வெப்பம் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகளும் அதிகமான மனிதவளக் குறியீடு உள்ள நாடுகளைவிட, குறைந்த வருமானம் கொண்ட மனிதவளக் குறியீடு கொண்ட நாடுகளான இந்தியா, பாகிஸ்தான, வங்கேதசத்தில் அதிகமாகும்.
குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் காற்று மாசு மூலம் உயிரிழப்புகள் கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லான்செட் கவுன்ட்டவுன் இயக்குநர் அந்தோனி காஸ்டெல்லோ கூறுகையில் “ பருவநிலை மாறுபாடு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே உலகம் முழுவதும் மனிதர்களுக்கு உடல்ரீதியான பல பிரச்சினைகளை கொடுத்துவிட்டது.
இதில் கரோனா பரவல் மேலும் தொடர்ந்தால், ஒவ்வொரு நாடும் வேறுவிதமான காலநிலை பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். 2021ம்ஆண்டு அறிக்கையின்படி 134 நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக் தெரிகிறது. அதிகமான வெப்பம் காரணமாக விவசாயிகள், கட்டிடத்தொழிலாளர்கள் தங்கள் பணிநாட்களை இழக்கவும், வருமானத்தை இழக்கவும் வாய்ப்புள்ளது. இதுவரை இல்லாத வகையில் வறட்சியும், பஞ்சமும் பரவலாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.